இரும்பு சத்து குறைவாக இருக்கிறது என்று மருத்துவர் சொன்னால், நாம் அதற்கான மாத்திரைகள் அல்லது பழங்களை சாப்பிடுவோம். ஆனால் கம்போடியா மக்கள் இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று இரும்பு மீனையே சமைத்து சாப்பிடும் வினோத நிகழ்வு
கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானி கிறிஸ்டோபர் சார்லஸ். 6 ஆண்டுகளுக்கு முன்பு கம்போடிய மக்களை ஆராய்ச்சி செய்தபோது, அவர்கள் ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவர்களின் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
அதனை போக்க, ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கிய அவர், அந்த ஏழை மக்களால் இரும்புச் சத்து மிக்க உணவுப் பொருட்களை வாங்கிச் சாப்பிட இயலாது என்பதை அறிந்தார். மேலும் சத்தான மாத்திரைகளையே, ஏன் இரும்புப் பாத்திரங்களில் சமைப்பதும் கூட முடியாத விஷயமாக இருப்பதை அறிந்த கிறிஸ்டோபர் யோசித்து, இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்தார்.
வார்ப்பு இரும்பினால் ஒரு மீனை உருவாக்கினார். பொதுவாக மீன் வடிவம், கம்போடிய மக்களுக்கு ஒரு ராசியான பொருள். எனவே மக்களுக்கும் கொடுத்து சமைத்து சாப்பிட செய்தார்.
சமைக்கும்போது, தண்ணீரைக் கொதிக்க வைக்கும்போதும் இந்த இரும்பு மீனை போட்டு பின்10 நிமிடங்களுக்குப் பிறகு எடுத்துவிட வேண்டும். அவ்வளவு தான். தேவையான இரும்புச் சத்து உணவில் சேர்ந்துவிடும் என்றார். ஒவ்வொரு நாளும் அதே மீனை உணவில் பயன்படுத்தலாம் என்றும் கூறினார்.
இந்த இரும்பு தண்ணீரை குடிப்பதனால் வாலிப வயதினருக்கு, அவர்களுக்கு தேவையான இரும்பு சத்தில் 75 சதவீதம் வரை கிடைத்துவிடுகிறது என்றும், குழந்தைகளுக்கு, தேவைக்கு அதிகமாகவே கிடைக்கிறது என்றும் தெரியவந்தது. இரும்பு மீனால் சமைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிட்டவர்களை ஓராண்டுக்குப் பிறகு சோதனை செய்து பார்த்ததில் பல நூற்றுக்கணக்கான மக்கள் ரத்தச்சோகையில் இருந்து மீண்டது தெரியவந்தது.
ரத்தச்சோகை மட்டுமில்லை, காய்ச்சல், தலைவலி கூட இப்பொழுது வருவதில்லை என்கிறார்கள் அங்குள்ள மக்கள். இதனால் மருத்துவமனைகள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் மூலம் இரும்பு மீன்கள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.
இரும்பு மீன் மருத்துவ முறை பிரபலம் அடையவே, கம்போடியாவில் இப்போது சுமார் 2,500 குடும்பங்கள் இதனை பயன்படுத்துகின்றன. இரும்பு மீன்களை தயாரித்து கொடுக்கவும் அங்கு ஏராளமான நிறுவனங்கள் வந்துவிட்டன.சுமார் 9,000 இரும்பு மீன்கள், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களுக்கு அனுப்பட்டிருப்பதாக, இரும்பு மீன் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.
கம்போடியாவில் வெற்றி பெற்ற இரும்பு மீன் திட்டத்தை வட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் செயல்படுத்த இருக்கிறார்கள். ஆற்று மீன், குளத்து மீன், கடல் மீன் என சமைத்து சாப்பிட்ட நமக்கு இந்த இரும்பு மீன் சமையல் சற்று வித்தியாசமானது என்றால் அது மிகையல்ல!
Commentaires